நாம் முன்னேர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ‘ஓலைச்சுவடிகள்’, முற்றிலும் இயற்கையானது மற்றும் இயற்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்கது என்பதை நினைத்து வியக்கிறேன். அதன் ஆயுட்காலம் இப்போது நாம் பயண்படுத்தும் சேமிப்பு சாதனங்களை விட அதிகம் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது.
எப்படி தயாரித்தனர் ஓலைச்சுவடிகளை?
ஓலைச்சுவடிகள் செய்ய பனை மர ஓலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில், குறிப்பாக மூன்று வகை பனை மரங்களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர் பனை போன்ற மரங்களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள்’ செய்ய பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வகை பனைமரங்களின் குருத்து ஓலைகளை எடுத்து, அதில் மஞ்சள் தடவி, நன்கு பதப்படுத்தியபின்பு, சரியான அளவில் வெட்டப்பட்ட பிறகு, அதில் எழுத்தாணியைக்கொண்டு எழுதி, அதன் மேல் சுடர்க்கரி அல்லது மீண்டும் மஞ்சள் தடவ, ஓலைச்சுவடி தயாராகிறது. மேலும் அது பூச்சிகளின் அரிப்பிற்கு உள்ளாகாமலிருக்கும் பொருட்டு, அதன்மேல் வேம்பு அல்லது வசம்பு போன்ற, திரவியங்கள் அல்லது எண்ணெய்கள் தடவப்படுவதும் உண்டு. மேலும் எலுமிச்சை புல் எண்ணெய் அல்லது கற்பூர எண்ணெய் ஓலையின் நெகிழ்வுத்தன்மைக்காக தடவப்படும்.
சுவடிகளில் எழுத பயன்படுத்திய எழுத்தாணிகள் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவையாகும்
நவீன காலங்களில், ஓலைகளை பூஞ்சை அரிக்காமல் பாதுகாக்க, ‘தைமோல் நீராவி புகையூட்டம்’ கொண்டு பதனிடப்படுகிறது.
தயார் செய்யப்பட்ட ஓலைகள், இளம் பழுப்பு நிறத்தை அடைந்ததும், எழுதப்பட தயாராக உள்ளதென்று பொருள். ஓலைகள் எழுதி முடித்ததும், அந்த கட்டின் மேலும் கீழும் ஓலையின் அளவைவிட சற்று பெரிய மரத்தாலான பலகைகள் கொண்டு பாதுகாப்பு உறை போன்று மூடப்படுகிறது. சிறிய நூல் நுழையும் வண்ணம், துளையிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக கோர்க்கப்படுகிறது. கோர்க்கப்பட்ட பின், அஃது ஒரு துணியினால் சுற்றப்பட்டு, தூசு படியாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஓலை காலப்போக்கில் வறட்சியடைந்தால், மீண்டும் அதன்மீது எண்ணெய் தடவப்படும். அப்போது, மெல்ல ஓலையின் நிறம் கருமையை தழுவ ஆரம்பித்திருக்கும்.
நமக்குக் கிடைக்கக்கூடிய சுவடிகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. அவற்றில் சிறிய, பெரிய சுவடிகள், பம்பர வடிவச் சுவடி, சிவலிங்க வடிவச் சுவடி ஆகியவவை இதில் அடங்கும்.
ஓலைச்சுவடிகள், பொதுவாக 15-60 செ.மீ நீளமும், 3-12 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். உலகிலேயே பெரிய ஓலைச்சுவடி ஒன்றை மைசூரு கண்காட்சியில், ‘ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’ காட்சிப்படுத்தியிருந்தது. அந்த சுவடி சுமார் 90 செ.மீ நீளமும், 4-5 செ.மீ. அகலமும் இருந்தது. விரமஹேஸ்வராச்சார சங்க்ரஹா(Viramahesvarachara Sangraha) எனும் அந்த ஓலைச்சுவடியை, நீலகந்த நாகமாதாச்சாரியா(Nilakantha Nagamathacharya) என்பவர் எழுதியிருந்தார்.
ஓலைச்சுவடி வரலாறு
ஓலைச்சுவடிகள், கி.மு 5-ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து கிட்டத்தட்ட கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்படுபொருளாக தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தியா, நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் இதில் அடக்கம். எனினும், ஓலைச்சுவடியில் எழுதும் இந்த முறையை, மிகச்சரியாக யார் கண்டறிந்தார்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.
பெரும்பாலானவை, கட்டிடக்கலை, கணிதம், வானியல், சோதிடம் மற்றும் மருத்துவம் பற்றின ஓலைச்சுவடிகள். ஒவ்வொரு முறையும், ஓலைச்சுவடிகள் ஏதேனும் பாதிப்பிற்கு உள்ளாகும்போதோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையோ மற்றொரு புதிய ஓலைச்சுவடிக்கு அதன் தகவல்கள் மாற்றப்பட்டு வந்துள்ளன.
அதாவது, திருக்குறள், திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தால், அந்த ஆதிச்சுவடி தற்போது நமக்கு கிடைப்பது அரிது. அஃது, கி.மு 1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பின், இப்போது, குறைந்தபட்சம் 9 தலைமுறைகளில் ஓலை மாற்றி எழுதப்பட்ட, அண்மைய சுவடிகளையே நம்மால் காண இயலும். ஏனெனில், சரியாக பாதுகாக்கப்பட்டிருந்தால், ஒரு ஓலைச்சுவடியின் ஆயுட்காலம், சராசரியாக, 200-லிருந்து 300 ஆண்டுகள் வரையே.
இலங்கையில் இருக்கும் அநுராதபுரத்தில், 1100 வருட பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் கண்டிபிடிக்கப்பட்டன.
ஓலைச்சுவடிகளின் அழிவு
ஆசியாவிலேயே, பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த, யாழ்ப்பாணம் பொது நூலகம், 1981-இல் எரிக்கப்பட்டது. அதில், தற்போது திராவிடம் என்று சொல்லப்படும் பகுதிகளைச்சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தின் பண்டைய ஓலைச்சுவடி நூல்கள் ஏராளமானவை தீக்கிரையாகின. அன்றைய தினம், எரிக்கப்பட்டதில் சுமார் 95,000 ஓலைச்சுவடிகளும், மீண்டும் கிடைக்கப்பெறாத பல புத்தகங்களும் அடக்கம். பல வருடங்கள் கழித்து இலங்கை அரசாங்கம் இதற்கு மன்னிப்பு கோரியிருந்தது. இரண்டு நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு, அத்துணை அறிவுசார், பாரம்பரிய நூல்களும், பாழும் அரசியல் மற்றும் இனவெறி காரணங்களால் எரிக்கப்பட்டதற்கு, எந்த மன்னிப்பையும் ஏற்க முடியாத மனப்பாங்கிலேயே நாம் உள்ளோம்.
சில ஓலைச்சுவடிகளை ‘டிஜிட்டல்’ முறைக்கு, அதாவது படங்களாக மாற்றிக்கொண்டிருப்பது சற்றே ஆறுதலளிக்கும் செய்தியாகும்.
நம்மிடம் இந்த நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள், நூறில் இருபது சதவீதம் கூட இல்லையென்றாலும், அதன் பின்னும் நாம் அந்த அரும்பொருளை, பாதுகாக்காமல் வீணாக அழியவும் தொலையவும் விட்டது, மிக்க வேதனை தரும் செய்கையாகவே தோன்றுகிறது.
தன்பங்கிற்கு, இலக்கியங்களையும் காப்பியங்களையும் மொழியின் இலக்கண மற்றும் வரலாற்றையும் தாங்கி நின்று, அதன் இறுதிக்காலம் வரை அவற்றை பத்திரப்படுத்திய ஓலைச்சுவடிகளை, அடையாளம், ஆதி மொழி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் பராமரித்து, பாதுகாக்க தவறியதை எங்ஙனம் கூறுவது? நாம் இழந்தது வெறும் மர ஓலைகளை அல்ல. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, ஆராய்ச்சி முடிவுகளை.. நோய் தீர்க்கும் மருந்துகளை.. வாழ்வியல் நெறிகளை.. சிந்தையில் கொஞ்சும் கவிகளை.. அனைத்திற்கும் மேல், நாம் இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும், ஏறத்தாழ குறைந்தபட்சம் 2000 வருட அனுபவங்கள் என்பதை மறந்து வீடாதீர்கள்